ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு, உலக அளவில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பிரதமர் வாழ்த்து:
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட இந்தியத் தலைவர்கள் அனைவரும் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி வாழ்த்து:
தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.
சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.
குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.
ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை பாராட்டு:
இந்த பாராட்டை வாசித்த சட்டமன்ற திமுக தலைவரும், நிதியமைச்சருமான அன்பழகன்,இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இந்தியர், அதுவும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் திரைப்படத் துறையில் உலகத்திலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இரண்டினை, தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக பெற்றுள்ளார்.
ஒரு தமிழன் தமிழ் திரையுலகினையே உலக அரங்கில் தலை நிமிர வைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற இரு ஆஸ்கார் விருதுகளை பெற்று தந்தமைக்கு, தமிழ்த் திரையுலகினர் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் அவர்கள் உயர்வையே தன் எண்ணமாகக் கொண்டு வாழ்ந்து வரும் முதல்வர் கலைஞர் சார்பாகவும், பேரவையின் உறுப்பினர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர் மேன்மேலும் பல்வேறு விருதுகளை பெற வேண்டுமென்று பேரவையின் சார்பில் வாழ்த்துகிறேன் என்றார்.
சென்னை மாநகராட்சி பாராட்டு தீர்மானம்:
இதேபோல், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் விவாத கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய திரைத் துறையின் கனவாக இருந்த ஆஸ்கார் விருதை தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளதற்கு சிறப்பு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகக் கூறி அதனை வாசித்தார்.
தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா:
இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரையுலகம் பெருமை அடைந்துள்ளது. தமிழர்கள் தலைமை நிமிர்ந்து நிற்கிறார்கள். உலக அளவில் தமிழன் புகழை கொண்டு சென்ற முதல் தமிழர் அவர். இளைஞர்களுக்கு வழி காட்டியாக அவர் மாறியுள்ளார்.
இவ்வளவு பெருமை யிலும் ஆஸ்கார் விருது பெறும் போது அவர் காட்டிய அடக்கமும் எளிமையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி தமிழை மறக்காமல் பேசி இருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும். அவரால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.
அந்த மாபெரும் தமிழ னுக்கு தமிழ் திரையுலகம் தந்த கலைஞனுக்கு சென்னையில் விரைவில் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப் படும். திரையுலகில்உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து இவ்விழாவை நடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து வாழ்த்து:
(வைரமுத்துக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் லடாய் என்பது பழைய கோலிவுட் செய்தி )
விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தமிழன் இந்தியாவுக்கு ஈட்டித்தந்திருக்கும் மிகப்பெரிய பெருமை. இது ஏ.ஆர்.ரகுமானின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
அவர் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் ஆஸ்கர் விருதுகளால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த பழியை இந்த விருது துடைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த விருதால், தமிழகத்தின் பெருமை, இந்தியாவின் பெருமை, உலக கலையுலகில் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு வரி விலக்கு அளிக்க நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேரடி வரிமற்றும் கலால் வரிவாரியங்களுக்கான கட்டிடஅடிக்கல் நாட்டு விழாநடந்தது. அதில் பேசியமத்திய உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு பணம் பரிசாக வழங்கப்பட்டு இருந்தால் அவருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதிமந்திரியிடம் பரிந்துரைசெய்வேன் என்றார்.
ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.
விருது அறிவிக்கப்பட்ட பின் ரஹ்மான் வீட்டை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும் ரஹ்மானை வாழ்த்தியும்கோஷமிட்டபடி உள்ளனர். கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். சென்னையில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும், ஏ.ஆர்.ரகுமானிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு திரும்பும் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க திரையுலகமும், அவரது ரசிகர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தமிழ் கலைஞர் ஒருவர் செய்துள்ள இந்த அரிய சாதனையை தனது சொந்த சாதனையாகவே தமிழ் திரைப்பட உலகம் கொண்டாடி வருகிறது. இன்று காலை முதலே ஒவ்வொரு கலைஞரும் ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள்.
சாமியார் மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கே போய் பலர், ரஹ்மான் குடும்பத்தாரிடம் வாழ்த்துக்களையும், மலர்க் கொத்துக்களையும் அளித்தனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே ரஹ்மானுக்கு தங்கள் இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இருவரும் ரஹ்மானுக்கு போன் செய்து தங்கள் சந்தோஷத்தையும், வாழ்த்துக்களையும் கூறினர். ஒவ்வொரு தமிழருக்கும், இந்தியருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ரஹ்மான் என ரஜினி கூறியுள்ளார்.
கே.பாலசந்தர்:
நான் தயாரித்த ரோஜா படத்திற்காக மணிரத்னம் இளைஞரான ரஹ்மானை அறிமுகம் செய்தபோதே அவர் என்னை கவர்ந்து விட்டார். ரஹ்மான் பல சாதனைகளை படைப்பார் என அப்போதே நினைத்தேன். அது இப்போது உண்மையாகி விட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன என்றார்.
சரத்குமார்:
திரைப்பட துறையின் உலகின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதுகளை இந்தியாவுக்கு பெற்று தந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் தமிழ் மண்ணில் பிறந்து இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
மாதவன்:
என்னால நம்பவே முடியலை.. இந்த விருதை பெற ரஹ்மான் முழுக்க முழுக்கத் தகுதியானவர். இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்துவிட்டார்.
எஸ்.ஜே.சூர்யா:
ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் எளிமையானவர். இந்த விருது வென்ற பிறகு கூட மிகவும் அமைதியாக, அடக்கமாக பேசியிருக்கிறார். அந்த குணம் யாருக்கும் வராது என்றார்.
அசின்:
ரஹ்மான் எப்பவும் என்னோட பேவரிட். அவரது அனைத்துப் பாடல்களும் என் இதயத்தில் நின்றவை. ஆஸ்கர் விருதினை அவர் நிச்சயம் பெற்றுவிடுவார் என்று நம்பினேன். அவருக்காக பிரார்த்தனை செய்தேன்.
கேஜே யேசுதாஸ்:
ரஹ்மானுடைய தந்தை ஆர்கே சேகருடன் பல படங்களில் பணியாற்றியவன் நான். பின்னர் அவர் பிள்ளை ரஹ்மானுடனும் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. நான் பார்த்து வளர்ந்த பிள்ளை இப்போது என்னைத் தலை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார். இன்னும் உயரட்டும் அவர் புகழ்.
மோகன்லால்:
ரஹ்மானுடன் இரு படங்களில் பண்யாற்றியுள்ளேன். இரண்டுமே மிகப் பிரமாதமான பாடல்களுடன் வந்து ரசிகர்களைக் கவர்ந்தன. மிக எளிமையான மனிதர். இந்த விருதுக்கு முழுவதும் ஏற்றவர் என்றார்.
1 comments:
"As a lyricist, who has been associated with Rahman for the past two decades, I say that it is a prize for his sincerity, dedication towards work and simplicity," Vairamuthu said.
He also recalled a recent incident when he called up Rahman to congratulate him for his 'Golden Globe' win.
"I asked him what time I can come and greet him. He didn't say anything and kept the phone. In the next ten minutes he was at my home. That is Rahman," Vairamuthu said.
Post a Comment