இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது. சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
ஐம்பது, நூறல்ல… 450க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள், எப்எம் ரேடியாக்காரர்கள், வட இந்திய மற்றும் சர்வதேச தொலைக்காட்சிகளின் பிரதிநிதிகள்… க்ரீன் பார்க் கட்டப்பட்ட இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக இந்தளவு பெரும் கூட்டத்தை இப்போதுதான் பார்ப்பதாகச் சொன்னார் ஓட்டல் சிப்பந்தி.
ஆஸ்கர் தமிழனை சிறப்பித்த பெருமை தனக்கே கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இந்த பத்திரிகையாளர் கூட்டத்தை தங்கள் ஓட்டலில்தான் நடத்த வேண்டும் என கிரீன் பார்க் வேண்டிக் கேட்டுக் கொண்டதாம்.
3 மணிக்கு வருவதாக இருந்த இசைப்புயல், மக்கள் வெள்ளம், ரசிகர்கள் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு வர கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
ஹோட்டலுக்கு வந்தவர், அங்கே கூடியிருந்த கூட்டம் பார்த்து ஒரு நிமிடம் அசந்துபோய்விட்டார்.
‘என்னபா… இவ்ளோ பிரஸ்காரங்க இருக்காங்களா…’ என வியந்தபடி உள்ளே நுழைந்த தமிழரின் செல்லப் பிள்ளையை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள். அளவுக்கதிகமான அன்பும் ஆர்வமுமே ஒருவரை மூச்சுமுட்டச் செய்துவிடுமல்லவா… அப்படி!
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள், ரஹ்மானால் எதுவும் பேச முடியவில்லை. பத்திரிகையாளர்களே பரம ரசிகர்களாகிவிட்டதன் விளைவு அது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் ரஹ்மானால் பொறுக்க முடியவில்லை.
‘நான் எதுக்கு இவ்வளவு அவசரமா அங்கிருக்க முடியாம சென்னைக்கு வந்தேன்… இந்த சந்தோஷத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தானே… நீங்க சண்டை போடாம இருந்தாதான் என்னால எதுவும் பேச முடியும். நான் எங்கேயும் போயிடப் போறதில்லை. இனிமேலும் இந்தச் சென்னையிலதான் இருக்கப் போறேன்… இதுக்கு மேலயும் இப்படியே நீங்க சத்தம் போட்டுக்கிட்டிருந்தா, நான் கிளம்பறேன்’ என்று அவர் எழ, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்களும், நிருபர்களும் அமைதியானார்கள்.
அடுத்து கேள்வி பதில் நேரம்:
கேள்விகள் சுமாராக இருந்தாலும் கூட, அவற்றுக்கு ரஹ்மான் அளித்த பதில்களில் அவரது பக்குவம் வெளிப்பட்டது.
‘எப்பவோ ஒரு முறை.. ஆரம்ப காலத்தில்… உலகத் தரத்துக்கு இந்திய இசையைக் கொண்டு செல்வதுதான் என் லட்சியம் என்று கூறினேன். பின்னர் அந்த வார்த்தைகளைக் காப்பாற்ற நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. இன்று அந்த வார்த்தையை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் இனி எப்போதும் இந்தமாதிரி வார்த்தைகளை விடாமல் பார்த்துக் கொள்வேன். சொல்லிவிட்டுச் செய்வதில் எந்த த்ரில்லும் இல்லை. ஆனால் செய்த பிறகு அதற்கான அங்கீகாரம் கிடைத்த பிறகு, வெளியில் சொன்னால்தான் ஒருவர் மீது மதிப்பும் மரியாதையும் வரும்’, என்ற அறிமுக உரையோடு கேள்வி பதிலைத் தொடங்கினார் ரஹ்மான்.
ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு விருது கிடைக்கும் என நம்பினீர்களா?
உண்மையில் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று 5 சதவீதம் மட்டுமே நம்பிக்கை இருந்தது. ஆனால் இரண்டு விருதுகள் கிடைத்துவிட்டன.
அது மிகவும் த்ரில்லிங்கான அனுபவம். ரொம்ப சந்தோஷப்பட்டேன். உண்மையில் ஆஸ்கர் விருது வாங்கியபோது இருந்ததை விட, அந்த ஜெய்ஹோ பாடலைப் பாட மேடையில் நின்றபோதுதான் நான் மிகவும் நெர்வஸாக இருந்தேன்.
எவ்வளவு பரிசு கிடைத்தது?
ஆஸ்கர் விழா முடிந்ததும் நிறைய பேர் எனக்கு பாராட்டு தெரிவித்து ஷாம்பைன் பாட்டில்கள் கொடுத்தனர். திரும்ப அவர்களிடமே கொடுத்து விட்டேன். விருது மூலம் பரிசாக 500 டாலர் கிடைத்துள்ளது. அதற்கும் வரிவிலக்கு கொடுத்துள்ளது அரசு.
மைக்கேல் ஜாக்சன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என நிறைய ஹாலிவுட் கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரஜினி சார், கமல் போன்றவர்கள் உடனே வாழ்த்துச் சொன்னார்கள். ஆஸ்கர் விருது கிடைத்ததும், இயக்குனர் மணிரத்தினத்திற்குதான் முதலில் போன் செய்தேன், இணைப்பு கிடைக்கவில்லை. பிறகு அவரே எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜா வாழ்த்துச் சொன்னாரா?
இளையராஜாவும் அவரது மகன்கள் இருவரும் எஸ்.எம்.எஸ். மூலம் உடனே வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் எனக்கு இந்த விருது கிடைத்ததற்காக இளையராஜா பெரிதும் மகிழ்ந்ததாக இமெயில் மூலம் தனது வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார்.
ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை ஒரு இந்தியர் இயக்கியிருந்தால் இத்தனை பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்குமா?
அந்த இயல்பு மாறாமல், திரைக்கதையின் உணர்வு மாறாமல் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் விருது கிடைத்திருக்கும். ஆனால் படமெடுத்தால் மட்டும் போதாது. அதை சிறப்பான முறையில் அங்கே வெளிக்காட்ட வேண்டும்.
ஸ்லம்டாக்கைப் பொறுத்தவரை அந்தப் பெரும் பொறுப்பை பாக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இந்தப் படம் ஆஸ்கருக்குப் போகக் காரணம், அமெரிக்காவில் இந்தப் படம் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்தப்பட விதம் என்பதை மறுக்க முடியாது.
பாக்ஸ் நிறுவனம் சொன்னது இதுதான்: படத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அந்த அணுகுமுறை இருந்தால் இந்திய இயக்குநரின் படங்களும் ஆஸ்கர் போகும்.
இந்தியக் கதைக் கருவை மையமாக வைத்து இந்தியாவிலேயே எடுக்கப்படுகிற இந்தியப் படங்களுக்கும் ஆஸ்கர் கிடைக்குமா?
அடிப்படையில் ஆஸ்கர் விருதுக் குழுக்கு ஒரு படம் போக சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பூர்த்தி செய்யும் விதததில் இருந்தால் நிச்சயம் ஆஸ்கர் விருதுத் தேர்வாளர்கள் இந்தியப் படங்களையும் தேர்வு செய்வார்கள்.
இந்த விருது உங்கள் இசைக்கு வழங்கப்பட்டது குறித்து சில சர்ச்சைகள் உள்ளனவே... உங்கள் திறமைக்கான அங்கீகாரமா இது?
ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இது என் திறமைக்கான விருது அல்ல... நான் அப்படி நினைக்கவுமில்லை. காரணம், இந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதைச் சரியாக செய்ததற்கு எனக்குக் கொடுத்துள்ள விருது இது அவ்வளவுதான். என்னுடைய டேலண்டுக்கு தரப்பட்டதல்ல.
இளையராஜாவுக்கு இந்த விருது கிடைக்காமல் உங்களுக்குக் கிடைத்துள்ளது பற்றி சிலர் பேசுகிறார்களே...
இளையராஜா இசை ரொம்பப் பெரிய விஷயம். சர்வதேச அளவில் பெரிய ரீச் இருக்கு அவரோட இசைக்கு. சிம்பொனி, திருவாசகம்னு நிறைய புராஜக்ட் பண்ணியிருக்கார் சர்வதேச அளவில்.
அவர் ஆஸ்கருக்கு அப்பாற்பட்டவர். அவரது இசையும் அப்படித்தான்... அவருக்கும் சர்வதேச வாய்ப்பு வந்து, அந்த இசை பாக்ஸ் மாதிரி ஒரு நிறுவனத்தின் மூலம் அகாடமிக்கு கொண்டு போகப்பட்டிருந்தால் நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.
ஆஸ்கார் மேடையில் தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
என் தாய் மொழியை அந்த இடத்தில் பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசினேன்.
ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற தலைப்பு, மற்றும் இந்தப் படத்தின் மூலம் இந்திய ஏழ்மையை ஹாலிவுட்டில் விற்று காசு பார்த்ததாக எழுந்த விமர்சனங்கள், குறிப்பாக அமிதாப் கூறியது குறித்து...
இந்த சர்ச்சைகள் தேவையில்லை. நாம்தான் நாயை இழிவாக நினைக்கிறோம். வெளிநாட்டில் நாய் செல்லப் பிராணி. நிறைய செலவு செய்து வாங்கி வளர்க்கின்றனர். படத்தில், குடிசைப் பகுதியில் வாழும் இளைஞன் சிரமப்பட்டு எப்படி வெற்றி பெறுகிறான் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய கருத்துக்கள் ஏதும் சொல்லப்படவில்லை. ஒரு பெரிய வல்லரசு நாட்டில் நிலவும் ஏழமைப் பிரச்சினைகளை, இளைஞர்கள் எப்படி தாண்டி வந்து சாதிக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறோம். இதில் தவறாக ஒன்றுமில்லை.
இசை மூலம் மக்களிடையே வேற்றுமைகளை களைவதே நோக்கம். ஜாதி மதம், இனம் தாண்டி இசை இருக்கவேண்டும். பேதம் கூடாது. அன்புதான் முக்கியம். அன்பால்தான் எந்த தடையும் உடைத்தெறிய முடியும்.
அடுத்த நீங்கள் என்னென்ன படங்கள் செய்கிறீர்கள்...?
இரண்டு ஹாலிவுட் படங்களில் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளேன். நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கவனமாகத்தான் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. ஆஸ்கர் கிடைத்திருப்பதால் வந்துள்ள பயம் அது.
தமிழில் மணிரத்னம் படம், ரோபோ... எந்திரன், கவுதம் மேனன் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்கிறேன். இந்தியில் ப்ளூ என்ற படத்துக்கு இசையமைக்கிறேன்.
இதைத் தவிர, திருக்குறளை இசைப்படுத்தியுள்ளேன். குணங்குடி மஸ்தான் பாடல்களை இசைப்படுத்த உள்ளேன். உலகத் தமிழர்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதும் பாடலை, அவர் எழுதி முடித்ததும் இசையமைத்து கொடுப்பேன்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படங்களில் இசையமைக்கும்போது, எந்த மொழி படத்தில் உங்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது?
உண்மையில் இசைக்கு மொழி பேதம் கிடையாது என்பதால் எந்த மொழியில் இசையமைப்பதிலும் பிரச்சனை இல்லை. என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருந்ததாக உணர்ந்தேன்.
இசைப்புயல், ஆஸ்கர் தமிழன் - எதை நீங்கள் விரும்புகிறீர்கள்?
இரண்டையுமே விரும்பவில்லை. இந்தப் பட்டம் சூட்டுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
நீங்களே ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்... சினிமாவில் நடிப்பீர்களா?
(பலத்த சிரிப்புடன்) அப்படியா?... எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. இசைத்துறையில் மட்டுமே எனது முழுக் கவனமும்.
ஆஸ்கர் விருது வாங்கியதை கெளரவித்து எம்.பி. பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
உங்கள் இசையில், `சிம்பொனி' எப்போது வரும்?
அதற்கு இன்னும் `டைம்' ஆகும்.
ஆஸ்கார் கேட்'டை நீங்கள் திறந்து விட்டு இருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ் பட கலைஞர்கள் ஆஸ்கார் விருது பெறுவார்கள் என்று நம்புகிறீர்களா?
நிறைய பேர் வாங்கப் போகிறார்கள்.
ஸ்லம் டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருந்தது?
ஸ்பீல்பெர்க் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.
இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கார் விருது வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது?
இதற்கு முன்பு இத்தாலி, ஜப்பான், ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறார்கள். இது, இந்தியாவின் `டைம்.' `ரோஜா' படத்துக்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ, அவ்வளவு சந்தோஷப்பட்டேன், ஆஸ்கார் விருது பெறும்போது...
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு யாரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்.
உங்கள் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?
உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையை போக்க ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே இசையமைத்த படங்களில், ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படம் என்று எந்த படத்தை கருதினீர்கள்?
லகான்.
ஆஸ்கார் விருது பெற்றது பற்றி உங்கள் குழந்தைகள் என்ன சொன்னார்கள்?
என் மூன்று குழந்தைகளும் எனக்கு இ-மெயில் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.
உங்கள் அடுத்த இலக்கு என்ன?
தமிழ் சினிமாவின் இசையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். ஆனால் அது என் ஒருவனால் மட்டுமே முடிகிற காரியமல்ல. அனைவரும் இணைந்து செயவ்பட வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்வேன். தொடர்ந்து இளஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன்.
நன்கு திட்டமிட்டு எடுத்து, உரிய முறையில் சந்தைப்படுத்த வேண்டும். இன்னொரு பக்கம் ஆஸ்கர் போன்ற விருதுக் கமிட்டிகளை முறையான வழியில் அணுக வேண்டும். நிச்சயம் அப்போது தமிழிலும் இந்தியாவிலும் என்னை தொடர்ந்து பலர் ஆஸ்கர் விருது வாங்கும் நிலை ஏற்படும் என்றார் ரஹ்மான்.
பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடி கைத்தட்டல்களை அள்ளினார் ரஹ்மான்.
0 comments:
Post a Comment