சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பினாமி வங்கிக் கணக்குகள் குறித்து வருமான வரித்துறை கடந்த 2002ம் ஆண்டிலேயே செபி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அப்போதைய மாநில அரசை எச்சரித்திருந்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
ஆனால், ராஜூவுக்கு நெருக்கமானவரான நாயுடு அதை அப்படியே கிடப்பில் போட்டார். அதே போல செபியும் இதை கண்டு கொள்ளவி்ல்லை.
கடந்த 2002ம் ஆண்டு துவக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் ஹைதராபாதைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.
அப்போது ராமலிங்க ராஜூ தனது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் ஏராளமான வங்கிகளில் பல்வேறு கணக்குகளை வைத்திருந்தது தெரியவந்தது.அந்த கணக்குகளில் ரூ. 30 கோடியளவுக்கு நிதி இருந்தது. இந்தப் பணத்தை சத்யம் பங்குகளை சந்தையிலிருந்து அவ்வப்போது வாங்கவும் விற்கவும் ராஜூ பயன்படுத்தி வந்ததும் உறுதியானது.
இது செபியின் இன்சைடர் டிரேடிங் (insider-trading) வர்த்தக விதிகளுக்கு முரணானதாகும். இதையடுத்து இது குறித்து பங்கு வர்த்தக கண்காணிப்பு அமைப்பான செபிக்கும், மாநில போலீசாருக்கும் வருமான வரித்துறை தகவல் தந்தது.
ஆனால், இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. இந்த வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அதே போல செபியும் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கு முக்கியக் காரணம் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தான் என்று கூறப்படுகிறது. ராஜுவுக்கு மிக நெருக்கமாக இருந்த நாயுடு இந்த விசாரணைகளை முடக்கினார் என்று தெரிகிறது.
ரூ. 2,065 கோடி சுருட்டிய ராஜூ:
அதே போல சத்யம் நிறுவன வருவாய் மற்றும் லாபம் கணிசமாக உயர்ந்துவிட்டது என ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் பொய்யாகக் கூறி ரூ.2,065 கோடிகளை தனிப்பட்ட முறையில் சம்பாதித்துள்ளார் ராமலிங்க ராஜூ.
சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தி காட்டி இருக்கிறார்.
நிறுவனம் நல்ல நிலையில் செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காக பல நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளார். இப்படி ஒவ்வொரு முறை அவர் செய்யும் போதும் சத்யம் பங்குகள் விலை அதிக அளவில் உயர்ந்து வந்தன.
ஒவ்வொரு முறை பங்கு விலை உயரும் போதும் ராமலிங்க ராஜூ தனது பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள பங்குகளை விற்றுள்ளார். இதன் மூலம் எக்கச்சக்க லாபம் கிடைத்துள்ளது.
2005ம் ஆண்டு 2 நிறுவனங்களை கையகப்படுத்தியதுடன், லாபம் அதிகமாக இருந்ததாக கணக்குக் காட்டி இருக்கிறார். அப்போது சத்யம் நிறுவன பங்கு 2 மடங்கு அதிகரித்தது. 2006ம் ஆண்டும் இதே போல செய்துள்ளார். அப்போதும் விலை ஏறியது சத்யம் பங்குகள் ரூ.726 வரை விற்றது. இந்த நேரத்தில் ராமலிங்கராஜூ தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் இருந்த 4.84 சதவீத பங்குகளை விற்றார். இதன் மூலம் மட்டும் அவருக்கு ரூ.1,126 கோடி கிடைத்தது.
இதே போல 2001ல் இருந்து 2008 வரை 14 சதவீத பங்குகளை விற்று மொத்தத்தில் ரூ.2,065 கோடி சம்பாதித்துள்ளார்.
தனது பெயரில் இருந்து பெரும் பகுதி பங்குகளை விற்று விட்டதால் கடந்த மார்ச் மாதம் முடிவில் 8.74 சதவீத பங்குகள் மட்டுமே அவர் கைவசம் இருந்தது.
இதன் மதிப்பு ரூ.2,400 கோடியாகும். 2001ம் ஆண்டுவாக்கில் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினரிடம் 22.89 சதவீத பங்குகள் இருந்தன. அதாவது 7.19 கோடி பங்குகள் இவர்களிடம் இருந்தன. இதன் பெரும் பகுதியை கொஞ்சம், கொஞ்சமாக விற்று பணத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர்.
இந்த நேரத்தில் தான் நஷ்டத்தில் இயங்கி வந்த தனது குடும்ப நிறுவனம் மேடாஸ் (Satyam திருப்பிப் போட்டால் Maytas!!) இன்ப்ராவை சத்யம் நிறுவனத்தை வாங்க வைக்கும் முயற்சி நடந்தது.
ஆனால் பங்குதாரர்கள் இந்த அளவு எதிர்ப்பார்கள் என்று ராஜு எதிர்பார்க்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அது கைவிடப்பட்டது.
நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment