அமெரிக்காவில், பெரும் விபத்திலிருந்து விமானத்தையும், பயணிகளையும் காப்பாற்ற, சாதுரியமாக செயல்பட்ட பைலட், விமானத்தை ஹட்சன் ஆற்றில் இறக்கி பேரிழப்பைத் தடுத்துள்ளார்.
விமானியின் இந்த சமயோசித நடவடிக்கையால் 155 பயணிகளும் உயிர் பிழைத்துள்ளனர்.
நியூயார்க்கின் லா கார்டியா விமான நிலையத்திலிருந்து அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் 155 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் கிளம்பியது.
கிளம்பிய சில விநாடிகளிலேயே விமான என்ஜின்கள் திடீரென செயலிழந்தன. அப்போது விமானம் மன்ஹாட்டன் பகுதிக்கு மேற்கே உள்ள ஹட்சன் ஆற்றின் மீது பறந்து கொண்டிருந்தது. விமான என்ஜின்கள் செயலிழப்பதை உணர்ந்த விமானி செஸ்லி சுல்லன்பர்கர், மீண்டும் விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பலாமா என யோசித்தார்.
ஆனால் அது ரிஸ்க் ஆனது என்பதால், விமானத்தை அப்படியே ஆற்றில் இறக்க முடிவு செய்து, பயணிகளிடம் நிலைமையை விளக்கி தைரியப்படுத்திய பின்னர் விமானத்தை ஆற்றில் இறக்கினார் செஸ்லி.
இதனால் படகு போல மாறிய விமானம் பத்திரமாக மிதந்தது. விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பெரும் உயிரிழப்பிலிருந்து தப்பினர். விமானத்திற்கும் பெரிய அளவில் சேதம் இல்லை.
விமானம் ஆற்றில் இறங்கியதும் அப்படியே மூழ்காமல் மிதந்ததால் பிரச்சினை ஏதும் இல்லை. அந்த ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் மோட்டார் படகுகளும், வாட்டர் டாக்சிகளும், ஆற்றில் விமானம் மிதப்பதைப் பார்த்து அங்கு விரைந்து வந்தன.
நடந்ததை கேள்விப்பட்டு அந்த டாக்சிகள், படகுகள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர். சிலர் விமானத்தின் மீது ஏறி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பயணிகளை மீட்டனர்.
சில பயணிகள் தாங்களாகவே ஜன்னல் வழியாக வெளியே வந்தனர். ஒரு பயணி வெறும் ஜட்டியுடன் வெளியே வந்தார். என்ன ஏது என்று கேட்டால், மீட்புப் பணிகள் தாமதமானால் இப்படியே நீந்திப் போய் விடலாம் என்று தயாராக இப்படி மாறினேன் என்று கூறி அனைவரின் பதட்டத்தையும் தணித்து சிரிக்க வைத்தார்.
அதேசமயம், சிலர் ஆற்றில் குதித்து நீந்தவும் தொடங்கினர். ஆனால் ஆற்று நீர் கடும் குளிருடன் இருந்ததால், அவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மிக மிக புத்திசாலித்தனமாக செயல்பட்ட விமானியை ஹீரோ என புகழ்ந்துள்ளார் நியூயார்க் ஆளுநர் டேவிட் பேட்டர்சன்.
என்ஜின்கள் எதுவுமே செயல்படாத நிலையில், மிக பத்திரமாக ஆற்றில் தரையிறக்கிய செயல் அசாதாரணமானது. அதிலும் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாதது வியப்பாக உள்ளது என்றார் பேட்டர்சன்.
என்ஜின் பழுதடைந்ததற்கு பறவை மோதியதே காரணம் என தற்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம் ஆற்றில் இறங்கிய சம்பவம் அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment