நெருங்குபவரை துச்சமென ம(மி)தித்து தூக்கி எறியும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இப்போதே "நாங்கள் ரெடி' என்று காளைகள் தயாராகி நிற்கின்றன.இதற்காகவே கன்றுக்குட்டியிலிருந்து பயிற்சி அளிக்கின்றனர். மணலில் தண்ணீரை கொட்டியவுடன் அதில் இருந்து வீசும் மண் வாசனைக்கு காளைகள் உசுப்பேறுவது ஆச்சரியம். கொம்புகள் மழுங்க, மழுங்க ஈரமணலை குத்தி, கிளறி பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துவிடும். இப்படிப்பட்ட காளைகளுக்கு சந்தையில் நல்ல "கிராக்கி'. அலங்காநல்லூர், பாலமேடு உட்பட சில இடங்களில் இதற்காகவே காளைகளை சிலர் வளர்ப்பதும், விற்பதும் உண்டு.
நாலைந்து ஜல்லிக்கட்டுகளில் பிடிபடாத காளைகளின் விலை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை. பிடிபட்ட காளைகளுக்கு விலை வெறும் ரூ.5 ஆயிரம் அல்லது கேரளாவிற்கு அடிமாடாக செல்ல வேண்டியதுதான். இதை உணர்ந்ததால்தான் என்னவோ காளையருக்கு பிடிகொடுக்காமல் விளையாடி வருகின்றன காளையர்.""ஜல்லிக்கட்டிற்கு நாட்டு காளைதான் சரியான தேர்வு. பழகிவிட்டால் நாம் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படும். யார் உணவு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எந்த காளையும் கட்டுப்படும்'' என்று காளையின் சிறப்புகளை மூச்சுவிடாமல் அடுக்குகிறார் கூறுகிறார் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ். தினமும் மேடான பகுதிக்கு அழைத்துச் சென்று குத்த, கிளற பயிற்சி கொடுக்கின்றனர். காளைகளுக்கு 3 வயதாகும் போது பல் தெரிய ஆரம்பிக்கும். பல்லை பார்த்தே காளையின் வயதை கணக்கிடலாம். 8 பல் இருந்தால் வயது 5 என காளைகளின் வயதுக்கு ஒரு கணக்கு வைத்திருக்கின்றனர். பிடிபடாமல் தொடர்ந்து இருந்துவரும் காளைகளுக்கு வயதாகி விளையாட முடியாத வரை ராஜஉபசரிப்புதான். ஜல்லிக்கட்டிற்கு தயாரான உடனே எந்த உணவையும் உட்கொள்ளாமல் பட்டினியுடன் "வைராக்கியமாக' இருப்பது காளைகளுக்கே உரிய பண்பு.
ஜல்லிக்கட்டு காளைகள் ஒரே இடத்தில் வந்து சேர ஏற்பாடு: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.,16ல் நடக்கிறது. இதில் பங்கேற்கும் காளைகள் திசை மாறி செல்லாமல் இருக்க ஒரே இடத்தில் ஒன்றுக்கூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் காரணமாக இங்கு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் அரசு சார்பில் ஆரம்பிக்கப்படவில்லை. நேற்று பணிகள் துவங்கின. சில ஆண்டுகளுக்கு முன்பு வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் தப்பும் காளைகள் நேராக அருகில் உள்ள வகுத்துமலைக்கு சென்று தஞ்சமடைவது வழக்கம். சில காளைகள் எங்கேயாவது சென்றுவிட்டு தானாக ஊர் திரும்புவதும் உண்டு.
ஒரு வாரம் வரை ஆக்ரோஷம் தீரும் வரை அங்கேயே சுற்றி திரியும் காளைகளை, அதன் உரிமையாளர்கள் தேடிப்பிடிப்பதே பெரிய வேலை. இதனால் மற்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் நேராக அரை கி.மீ., தூரத்தில் உள்ள சாரங்கபாணி தோட்டம் என்ற இடத்தில் வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது உரிமையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், இந்தாண்டும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment